( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அண்மையில் ஒரு வேலையின் நிமித்தம் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குச் சென்ற போது எனது வகுப்பறைத் தோழன் நண்பன் ஐயூப்கானைச் சந்திக்கக் கிடைத்ததில் பேரானந்தம்!
உதவி மாவட்டப் பதிவாளர் காரியாலயத்தில் தனது கடமையிலிருந்த நண்பன் ஐயூப்கான் என்னைக் கண்டதும் ஓடிவந்து, ' எங்கே மச்சான் இந்தப் பக்கம்? தனக்கே உரிய தனிப்பாணியில் என் நெஞ்சில் தனது வலது முன்னங் கையால் தாக்கி சுகம் விசாரித்தார்.
அவ்வாறு தனது தனிப்பாணியில் சுகம் விசாரிப்பதுதான் நண்பர் ஐயூப்கானின் முதற்படி! அது ஐயூப்கான்.தெரிந்தவர்களுக்கு மட்டுந்தான் தெரியும்! சில நண்பர்கள் ஐயூப்கானைக் கண்டதும் இவ்வடிகளுக்குப் பயந்து ஓடி ஒழிப்பதுமுண்டு!
இத்தனைக்கும் நண்பர் ஐயூப்கான் பொல்லாதவரும் அல்ல! சிறந்த பண்பாளன்! எவரை எந்த இடத்தில் கண்டாலும் மரியாதையோடு உரிய உறவு முறைகளை, முறைப்படி சொல்லி அழைப்பதில் முதன்மையானவர். சிறந்த ஒழுக்கப் பண்புகள் நிறைந்த, கல்விமான்களைக் கொண்ட குடும்பத்தில் பிறந்த முத்து! இந்த முத்துக்கு வித்திட்டவர் விலேஜ் ஹெட்மேன் மர்ஹூம் ஆதம்பாவா அவர்கள்.
நண்பர்களான தாஹீர்கான், ஐயூப்கான் போன்றவர்களோடு தோட்டத்துப் பள்ளியில் படிக்கின்ற காலம் மிக இனிமையானது. அல்-அஷ்றக் காலம் அதை விட இனிமையும் பசுமையும் நிறைந்தது. அக்காலத்தில் நண்பர்களின் குடும்பத்தில்தான் அதிகமானோர் வெளிநாடுகளில் தொழில் புரிந்தனர். அக்காலத்தில் ரீ சேட், றெணிங் றவுசரை இவர்கள் குடும்பத்தில்தான் அதிகமாகக் காண முடியும்! நாங்களும் அவைகளில் நனைந்ததுண்டு! சாதிக் காக்கா, உடையான் காக்கா, பசீல் காக்கா, றாஜா கான் தம்பி, இரண்டு ராத்தாமார் என்று எல்லோருமே அன்பானவர்கள்! முறக்க முடியாத குடும்பம்!
இலங்கையில் எந்த இடத்தில் கண்டாலும் அன்பு, ஆதரவுக்குப் பஞ்சமில்லை! பதறிப்போய் விழுந்து விழுந்து ஆதரிக்கும் பண்பாளர்கள்! பலமொழிகளைப் பயன்படுத்தும் சொல்லாற்றல் கொண்டவர்கள்! எந்த உயர்பதவியைக் கொடுத்தாலும் அதனை அலங்கரிக்கச் செய்யும் ஆற்றலுள்ளவர்கள்!
நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பணிபுரிவோரில் நிந்தவூர் மண் ஈன்ற ஒரே ஒரு அதிகாரக் கதிரைக்குரியவர் நண்பர் ஐயூப்கான்! இவருக்குப் பிரதேச செயலாளர் பதவி வழங்கினாலும் துணிவோடும், பணிவோடும் செய்து முடிப்பதில் வல்லவர். நண்பர் ஐயூப்கான் இன்று போல் என்றும் வாழ, எல்லாம் வல்ல அல்லாஹ்வை இருகரமேந்திப் பிரார்த்திக்கிறேன்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக