Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

புதன், 6 ஜனவரி, 2021

பேராசிரியர் முஹம்மட் ஜலால்தீன் அவர்களுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள் - ஏ.எம். பறக்கத்துள்ளாஹ்

 

தென்கிழக்கின் முக வெற்றிலையான கல்முனை மாநகர சபையின் வடக்கே மாண்புற்றுத் திகழும் கல்வி எழுச்சியின் முன்னோடி ஊரான மருதமுனையில்  1954.01.06அன்று முஹம்மட் ஜலால்தீன் அவர்கள் பிறந்தார்.



ஒருகாலத்தில் கல்முனை நகரில் பிரபல்யமிக்க பலசரக்கு வத்தக நிலையமாக காணப்பட்ட #சம்சுதீன்_அன்_சன்ஸ் குரோசரி்யின் உரிமையாளரான மருதமுனையைச் சேர்ந்த முஹம்மது இஸ்மாயில் முஹம்மது சம்சுதீன் மற்றும் வெள்ளம்மா என செல்லமாக அழைக்கப்பட்ட மீராலெப்பை உம்முல் குல்சூம் ஆகியோரின் நான்கு பிள்ளைகளில் மூன்றாவது மகனாவார்.

இவரது தாயின் சகோதரியான ஹாஜியாணி் சரீபா உம்மா  - இஸ்மாலெப்பை ஹாஜியார் தம்பதியினருக்கு குழந்தைச் செல்வமின்மையால் தன் சகோதரியின் குழந்தைகளை அரவணைத்துக் கொண்டார்.

பெரியம்மாவின் பராமரிப்பு சொந்தத் தாயைக்கு மேலதிக தாய் போன்றமைந்தது. அல்லாஹ்வின் நாட்டம் இவ்வானந்தம் நிலைக்கவில்லை.

இவரது நான்கு வாயதில் தாயார் இறையடி எய்தினார். மனைவியில்லாத இடைவெளியையும், தாயில்லா குறையையும் சிறியதாய்  உம்மு சல்மா ஏற்றுக் கொண்டார்.

தன் சகோதரியின் நான்கு பிள்ளைகளையும் தனது மூன்று குழந்தைகளையும் சேர்த்து  பாசமூட்டி வளர்த்தார்.

முஹம்மட் ஜலால்தீன் அவர்கள் தரம் 01 முதல் 08 வரையான கல்வியை மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியிலும், 09 முதல் கல்வியை கல்முனை உவெஸ்லி் உயர்தரப் பாடசாலையிலும் கற்றார்.

தனது குழந்தைகளுள் ஒருவரை மார்க்கக் கல்வி போதிக்கும் மௌலவியாக ஆக்க வேண்டும் எனும் தந்தையின் நிய்யத்திற்கு இணங்கிய இவர் தரம் 10 கற்றுக்கொண்டிருந்த நிலையில் பாடசாலையிலிருந்து விலகினார்.

1970 களில் இலங்கையில் பிரபல்யமாகத் திகழ்ந்த அரபுக் கல்லூரியான #மஹரகம_கபூரிய்யா_அரபுக்_கல்லூரியில் சேர்ந்து 1970-1977 வரையிலான எட்டு வருடங்கள் மார்க்கக் கல்வி பயின்றார்.

இவரது வகுப்பின் 24 மாணவர்களுக்கும் ஒரு வருடம் பொறுப்பாசிரியராக ஜம்இய்யதுல் உலமா சபையில் நீண்டகாலமாக உதவி செயலாளராகக் கடமை புரிந்த முபாரக் மௌளவி அவர்கள் செயற்பட்டார்.

அரபிக் கல்லூரியின் நோன்பு விடுமுறையில் ஊருக்கு வரும் சந்தர்ப்பத்தில் தனது பால்ய நண்பர்களான சட்ட முதுமானி அப்துல்லா சட்டக் கல்லூரிக்கும், எம்..எம். றபீக் (மருதமுனையின் முதல் சட்டத்தரணியும், கௌரவ பதில் நீதிபதியும்) அவர்கள் பேராதனைப் பல்கலைக் கழகத்திற்கும்  தெரிவாகியிருந்தனர்.

இச்சம்பவமானது தானும் ஒரு பல்கலைக் கழகத்தில் இணைந்து உலகக் கல்வியைத் தொடர வேண்டும் எனும் ஆர்வத்தை ஜலால்தீன் அவர்களின் மனதில் உண்டுபண்ணியது.

அக்கால அரபுக் கல்லூரிகளின் பாடத்திட்டங்களில் உலகக் கல்வி இணைந்திருக்கவில்லை. அதனால் அரபுக் கல்லூரி நிருவாகத்தினருக்குத் தெரியாமல் சுயமாகக் கற்று தனிப் பரீட்சாத்தியாக 1974இல் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் தோற்றி 2D, 3C, 2S என்ற பெறுபேற்றுடன் சித்தியடைந்தார்.

அதே போல் உயர்தரக் கல்வியையும் சுயமாகக் கற்று தனிப் பரீட்சாத்தியாக 1976 இல் கல்விப் பொதுத் உயர்தரப் பரீட்சையில் தோற்றினார். தான் பரீட்சையில் தோற்றிய  அறபு, இஸ்லாம், தமிழ், பொருளிலியல், ஆகிய பாடங்களில் முறையே A,A,C,C ஆகிய பெறுபேற்றுடன் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவானார்.

அவ்வருடம் மருதமுனையிலிருந்து பேராதனைப் பல்கலைக் கழகத்திற்கு மர்ஹூம் எம்.எல். ஜமால்டீன்(Superintendent  of Police), கொழும்பு பல்கலைக் கழகத்திற்கு எம். றஸீன் (விலைக் கட்டுப்பாட்டாளராளர்), ஆகியோருடன் இவர் களணி பல்கலைக் கழகத்திற்கு தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரபுக் கல்லூரிக்குத் தெரியாதல் இரு பரீட்சைகளில் தோற்றிய விடயம் கல்லூரியின் நிருவாகத்தினருக்குத் தெரியவந்தது. இதனை சமாளிப்பதற்கு இவர் அரும்பாடுபட்டார்.

1977 நவம்பரில் மௌலவிப் பட்டப் படிப்பு நிறைவு பெறவுள்ள நிலையில்; அவ்வாண்டு ஜூனில் களணிப் பல்கலைக் கழகத்தில் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டிருந்து. அறபுக் கல்லூரி நிறைவாடையாமல் பல்கலைக் கழகத்தில் இணைந்து கொள்ள முடியாத நிலையை தோற்றுவித்தது.

தனது வகுப்பு 24 மாணவர்களுள் இவருடன் இன்னுமொரு மாணவர் மாத்திரமே அரபுக் கல்லூரியின் இறுதி ஆண்டு வரையில் (தஃஸில்) கற்றனர்.

தனக்கேற்பட்டுள்ள இக்கட்டான நிலையிலிருந்து விடுபடும் நோக்கில் உலகக் கல்வியின் அவசியம், இஸ்லாமியக் கல்வியுடன் இணைந்த உலகக் கல்வியின் நன்மைகள், பல்கலைக் கழகத்தின் முக்கியத்துவம் என்பவற்றை விளக்கி கடிதம் ஒன்று அரபுக் கல்லூரியின் அதிபர் சம்சுதீன் ஹஸ்ரத் (இந்தியா) அவர்களுக்கு இவர் அனுப்பி வைத்தார்.

இவரது நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சம்சுதீன் ஹஸ்ரத் அவர்கள் பல்கலைக் கழகத்திற்குச் சென்று பதிவு செய்வதற்கென இரு வார கால விடுமுறை வழங்கினார்.

அரபுக் கல்லுரியில் இறுதிப் பரீட்சையில் தோற்றி இரண்வது அப்பர் கிளாஸ் பெற்று எட்டு வருட மார்க்கக் கல்வியை நிறைவு செய்து மௌலவிப் பட்டம் பெற்றார்.

உயர்தரத்தில் பொருளியல் படத்தில் திறமைச் சித்தி காரணமாக களணிப் பல்கலைக் கழகத்தில் B.Com கற்கையில் இணைக்கப் கட்டிருந்தார்.

பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றிய கலாநிதி சுக்ரி அவர்களிடம் கலந்து பேசி கலைமானிப் பட்டப் படிப்பை மாற்றிக் கொண்டார். அறபு மொழியை விசேட பாடமாகக் கொண்டு கற்கையைத் தொடர்ந்தார். நாளடைவில்  இவருக்கும் விரிவுரையாளர் கலாநிதி சுக்ரி அவர்களுக்கும

இடையில் நெருக்கமான உறவு ஏற்பட்டது.

1978,1979 காலப்பகுதியில் ஜாமியா நழீமியாவில் பகுதிநேர விரிவுரையாளராக கடமையாற்றினார்.  இக்காலத்தில் இவரது மாணர்களுள் ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிச் செயலாளர் #அகார்_முஹம்மட், ஓய்வுநிலை தேர்தல்கள் ஆணையாளர் #Mohamed_Mohamed_Mahdoom, சவூதி அரேபியாவின் இலங்கைக்கான கவுன்சிலராக கடமையாற்றும் சம்மாந்துறையைச் சேர்ந்த எம். அமீர், மூத்த இயக்கியவாதியும், ஊடகவியலாளரும் எழுத்தாளருமான Ashroff Shihabdeen, புத்தளம் மலீக் (முஸ்லிம் கலாச்சாரத் திணைக்களம்), ஜமாஅத்தே இஸ்லாமியாவின் நீண்ட கால தலைவராக செயற்பட்ட உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் ஆகியோர் குறிபிடத்தக்கவர்களாவர்.

1980 களில் களணிப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழி மூலமான பாடத்திட்டங்களின் மாற்றம் காரணமாக அம்மாணவர்கள் பேராதனைப் பல்கலைக் கழகத்திற்கு மாற்றப்பட்டனர். தனது இறுதி ஆண்டை பேராதனியவில் நிறைவுசெய்து அறபு மொழி  விசேட பட்டப்படிப்பை (2nd class) நிறைவு செய்தார். 1981 முதல் 1984 வரையில் உதவி விரிவுரையாளராக அங்கேயே கடமையாற்றினார்.

1984 களில் ஆசிரியர் நியமனம் கிடைத்தவுடன் மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றினார்.

1985 - 1987 வரையில்  யாழ்பபாண பல்கலைக் கழகத்திலும், 1988  - 1989வரையில் கிழக்குப் பல்கலைக் கழகத்திலும், உதவி விரிவுரையாளராகவும், 1989களில் அறபுமொழி் நிரந்தர விரிவுரையாளராகவும் கடமை புரிந்தார்.

நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழல் காரணமாக கிழக்குப் பல்கலைக் கழகத்திலிருந்து இடம்பெயர்ந்த விரிவுரையாளர்களாக பேராதனை பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டு 1992 - 1995 வரை அங்கே கடமையாற்றினார்.

1996 களில் தென்கிழக்குப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது நியமிக்கப்பட்ட கலாநிதிகளான இஷாக்,  றமீஸ், ஆலிப், பேராசிரியர் கலீல் ஆகிய விரிவுரையாளர்களுள் இவரும் ஒருவராவார்.

1996 - 1999 காலப்பகுதியில் பேராதெனிய பல்கலைக் கழகத்தில் அறபு இலக்கியத்தில் தத்துவ முதுமாணி  M.Phil. நிறைவு செய்து சிரேஷ்ட விரிவுரையாளரானார்.

2000 - 2004 வரையில் இஸ்லாமிய கற்கைத்துறை கலாநிதி பட்டப் படிப்பை லண்டன் முஸ்லிம் கல்லூரியில் தொடர்ந்தார். இக்காலங்களில் லண்டன் வெஸ்டன் கொலிஜ், வெஸ்டேன்ஸ் கொலிஜ் ஆகியவற்றில் பகுதி நேர விரிவுரையாளராக கடமையாற்றினார்.

இந்நிலையில் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இஸ்லாமிய கற்கை அறபு மொழி பீடத்தை ஆரம்பிக்கும் தேவை காரணமாக உபவேந்தரின் அழைப்பில் பல்கலைக் கழகத்தில் இணைந்து கொண்டார். பின்னர் 2009இல் PhD நிறைவு செய்தார்.

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இஸ்லாமிய கற்கை அறபு மொழி பீடத்தின் முதலாவது பீடாதிபதியாகவும் 2005 - 2011 வரையில் இரண்டு தடவைகள் பீடாதிபதியாகவும் கடமையாற்றினார்.

தனது சுய கல்வி மீதான ஆர்வம் காரணமாக 2017இல் இலங்கையின் முதலாவது அறபு பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

பல்கலைக் கழக விரிவுரையாளராக 38 வருடங்கள் சேவையாற்றி 2019.09.30 ஆம் திகதி ஓய்வு பெற்றார். இலங்கை முஸ்லிம்களின் முதலாவதும், ஒரேயொரு அறபு மொழி பேராசிரியராக முஹம்மட் ஜலால்தீன் சேர் அவர்கள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

ஆய்வு சமர்ப்பித்தல் மற்றும் ஆய்வுகளுக்காக இவர் உலகின் இருபதுக்கு மேற்பட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளார்.

ஜலால்தீன் அவர்கள் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடலையில் தரம் 10இல் கல்வி பயின்ற காலத்தில் #திருவள்ளுவர்_ஈராயிரம் ஆண்டு விழாவில் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் பங்கேற்றார்.

இப்பேச்சுப் போட்டியில் #வள்ளுவர்_காட்டிய_அறம் எனும் தலைப்பில் இவர் நிகழ்த்திய பேச்சில் முதலாமிடத்தைப் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

அரபுக் கல்லூரியில் கற்கும் காலங்களிலும்  ACYMMA, சோனகர் இஸ்லாமிய கலாச்சார நிலையம், கம்பளை சாஹிறா முஸ்லிம் மஜ்லிஸ் உள்ளிட்ட பல அமைப்புக்கள் அகில இலங்கை ரீதயில் நடாத்திய பேச்சுப் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்.

1973 -1977 களில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் இவர் தங்கப் பதக்கங்களைப்

பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பேராதனைப் பல்கலைக் கழக தமிழ் சங்கம் நடாத்தும் எழுந்தமான பேச்சுப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றுக் கொண்ட இரண்டாமவர் இவராவார். இதற்கு முன்னர் கலாநிதி சுக்ரி அவர்களும் 1980களில் இவரும் தங்கப் பதக்கங்களை பெற்றனர்.

1997களில் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற தேசிய மீலாத் விழாவில் இவரால் சமர்ப்பிக்கப்பட்ட #அம்பாறை_மாவட்ட_வரலாற்றியல் எனும் ஆய்வுக் கட்டுரை தங்கப் பதக்கம் வெற்றது.

2017இல் தென்கிழக்குப் பல்கலைக் கழத்தினால் சிறந்த ஆய்வாளருக்கான விருது வழங்கிக் கௌரவக்கப்பட்டார்.

மருதமுனை உலமா சபை, மஜ்லிஸ் சூறா சபை ஆகியவற்றின் முன்னாள் தலைவராகவும், கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவையின் தலைவராக பதவி வகித்து வருகின்றார்.

இவர் எழுதி வெளியிட்ட 20 நூல்களுள்

#அம்பாறை_மாவட்ட_முஸ்லிம்களின் வாழ்வும் வளமும்,

#தமிழ்_பேசும்_முஸ்லிம்களின் வாழ்வும் வரலாறும்,

#இலங்கை_முஸ்லிம்களின்_கல்வி

#அல்_குர்ஆன்_விரிவுரைகள்

#முதலாவது_அறபுத்தமிழ்_தப்ஸீர் பத்ஹூர் ரஹ்மான் - ஒர் அறிமுகம்

#Origine_of_Islamic_Movements_in_Sri_Lanka,

#அறபுத்_தமிழ்

ஆகிய நூல்களுடன் ஏனைய அறபு மொழி நூல்களும் உள்ளடங்குகின்றன.

சாய்ந்தமருதைச் சேர்ந்த லெப்பைக்கனி நபீஸா மர்யம் அவர்களை 1983இல் மணந்து; டாக்டர். பாத்திமா சுப்னா, பட்டதாரி ஆசிரியை பாத்திமா  சுர்பா, டாக்டர் பாத்திமா சுமையா ஆகியோரின் தந்தையாகவும், ஜயவர்ததன பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடத்தில் இறுதி ஆண்டில் கற்கும் வளர்ப்பு மகன் முஹம்மட் றிபாத் உற்பட ஏழு பேரக் குழந்தைகளுடன் ஆனந்த வாழ்வை கொண்டு செல்கிறார்.

பேராசிரியர் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.

 

.எம். பறக்கத்துள்ளாஹ்

கல்முனை

2021.01.06

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக