இம்மாதம் 23ஆம் திகதி இலங்கை வருகிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
எதிர்வரும் பெப்ரவரி 23 ஆம் திகதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் கடந்த ஆண்டு முதல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு விஜயம் செய்த முதல் அரசாங்கத் தலைவராக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இருப்பார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் கொழும்புக்கான மூன்று நாள் விஜயத்தின் ஒரு மாதத்திற்குப் பிறகு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இந்த திட்டமிட்ட விஜயம் அமையவுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்திருந்தார்.
யுத்த காலத்தில் இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்கிய நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாகும்.
அத்துடன் கடந்த காலத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு ஆதரவாக பாகிஸ்தானும் முக்கிய பங்கு வகித்தமையும் குறிப்பிடத்தக்கது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக